கார்ட்டூனிலும் படங்களிலும் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும் அவர்கள் உலகத்தை காப்பாற்றி சாதனைகள் செய்வதாக காட்டப்பட்டாலும் நிஜ வாழ்வில் நம் வீட்டு பெண்கள்தான் சூப்பர் ஹீரோ. ஸ்பைடர்மேன்,சூப்பர்மேன் மட்டுமல்ல வேறு யாராலும் செய்ய முடியாத எவ்வளவோ வேலைகளை எந்தவித சிரமமும் பாராமல் செய்து முடிக்க அவளால்தான் முடிகிறது என்றால் அப்போ “அவள்” தானே சூப்பர்ஹீரோ!

அதிகாலையில் ஒரு வீட்டில் முதலாவதாக எழுவதும், இரவில் கடைசியாக தூங்குவதும் அவளாகத்தான் இருக்கும். வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் “அவளுடைய” துணை மற்றவருக்கு நிச்சயமாக தேவை. ஆனால் அப்படியான அவளுக்கு இந்த சமூகத்தில் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ முடிகிறதா என்பது கேள்விக்குறிதான். தினமும் பத்திரிகைகளிலும் செய்திகளிலும் அவளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி செய்திகள் வந்துக் கொண்டேதான் இருக்கிறது. அவள் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது என்றாலும் கூட அவளுக்கு நடக்கும் வன்முறைகளும் அவள் அனுபவிக்கும் சித்திரவதைகளும் அப்படி ஒரு சூழ்நிலைக்கு உலகத்தை தள்ளும். உலகில் பல பகுதிகளில் பெண்கள் அவர்களது உரிமைக்காக போராடி வந்தாலும் கூட அவளுக்கு எதிரான வன்முறைகள் பஞ்சமில்லாமல் நடந்துக்க கொண்டிருக்கிறது. பொறுப்பற்ற பெண் சிசு கொலை, ஆண் குழந்தை மீதுள்ள அதீத ஆசை மற்றும் வன்கொடுமைகளால் கொல்லப்படுதல் என்பவற்றால் உலகின் அரிய வகை உயிரினமாக பெண் பதியப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

டெல்லியில் இயங்கும் ஆசிய மனித உரிமைகளுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அறிக்கை ஒன்று பாலினம் தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்புகளால் ஆண்டொன்றுக்கு 117 மில்லியன் பெண்கள் கொல்லப்படுவதாகவும் சீனா, இந்தியா போன்ற வளர்முக நாடுகள் பெண் படுகொலை அதிகமாக நடக்கும் ஆசிய நாடுகள் எனவும் தெரிவிக்கிறது. இந்த நிலை தொடருமாயின் ஆசியா மட்டுமல்ல உலகம் முழுவதும் “அவள்” இல்லாத ஒரு நாளை எதிர்கொள்ள நேரிடும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் பின் சிலரது குரல் ஒலித்தாலும் பலரும் நமக்கு இல்லை நம் வீட்டில் இல்லை என்று கடந்து போகும் மனநிலை வேதனைக்குரியது. மேலும் ஒரு சிலர் சோசியல் மீடியா போராளிகளாக மட்டுமே இருக்கிறார்கள். வீர வசனங்களுடன் போஸ்ட் போடுவது திட்டி ஆவேசமாக பேசி வீடியோ போடுவது என இருக்கும் அவர்களது போராட்டம். தன்னலமற்ற அவளை காக்க இது போதுமானதா?…….. ஒவ்வொரு நாளும் உலகின் எதாவது ஒரு மூலையில் ஒரு பெண் எதோ ஒரு வகையில் துன்புறுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறாள் என்பதுதான் உண்மை.

“அவள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?.….”


குடும்பங்கள் இல்லை-

குடும்ப தலைவனாக ஆண் இருந்தாலும் குடும்பங்களின் முதுகெலும்பாக பெண்தான் இருக்கிறாள். அவள் குடும்பத்திற்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் துணையாக நின்று போராடுகிறாள் அம்மாவே அதற்கு சிறந்த உதாரணம். அம்மா வீட்டில் இல்லை என்றால் நம் பாடு பெரும்பாடு அல்லவா? எது எங்கு இருக்கும்? எதை எப்படி செய்வது என்று தெரியாமல் திணறி போக மாட்டோமா?.. வீட்டுக் கடமைகளில் தன்னலமற்று செயற்படும் அவள் (அம்மா) இல்லை என்றால் குடும்பங்களே இல்லை என்றாகி விடும்.

குழந்தை/இளமை பருவம்-

உடன்பிறப்பாக ஒரு அக்காவோ தங்கையோ இருக்கும் அனைவருக்கும் அவர்களது குழந்தை/இளமை பருவம் பசுமையான நினைவுகளை கொண்டதாகத்தான் இருக்கும். மேலும் முக்கியமான பருவமாகவும் இருக்கும். தாய்க்கு அடுத்து வீட்டில் இரண்டாம் தாயாக இருப்பவள் நம் சகோதரி. எத்தனை சண்டைகள் குறும்புகள் செய்து இருப்போம் அவளோடு… அவள்(சகோதரி) இல்லை என்றால் குழந்தை /இளமை பருவம் அத்தனை அழகாக இருந்திராது.

திருமணங்கள் இல்லை-

ஒவ்வொரு ஆணுக்கும் தனது அன்பையும் வாழ்க்கையையும் பகிர்ந்துக் கொள்ள ஒரு பெண் துணை கட்டாயம் தேவை. அவனது சுக துக்கங்களில் அவனுக்கு உற்ற துணையாக பக்கபலமாக இருந்து அவனது முன்னேற்றத்திற்கு காரணமாக ஒரு பெண் இருப்பாள். அதை தானே ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். மனைவியாக தோழியாக காதலியாக அன்புடனும் அர்ப்பணிப்புடனும் இருக்கும் அவள் இல்லாவிடின் அந்த ஆணின் வாழ்க்கை முழுமை பெறுமா?

மகிழ்ச்சியே இல்லை-

தந்தைக்கு ஒரு மகளால் கிடைக்கும் மகிழ்ச்சியை ஒரு மகனால் எப்போதும் கொடுக்க முடியாது! அதேபோல் ஒரு தாய்க்கு மகளால் கிடைக்கும் ஒத்துழைப்பை ஒரு மகனால் கொடுக்க முடியாது! மகள் எப்போதும் தன் தந்தைக்கு குடும்பத்தின் மீதுள்ள பொறுப்பை உணர்த்திக் கொண்டே இருப்பாள். திருமணத்திற்கு பின்னும் கூட மகள் மகளாகவே இருப்பாள். வீட்டில் மகிழ்ச்சியை பரப்புவாள். அவள் (மகள்) இல்லாவிடின் தந்தை எவ்வாறு அந்த மகிழ்ச்சியை பெறுவார்?…


ஆக “அவள்” இல்லாத இந்த உலகம் மனிதர் வாழ எவ்விதத்திலும் பொருத்தமான இடமாக இருக்காது என்பது உறுதி. அப்படி ஒரு நாள் உருவாக காரணமா இருப்பவர்கள் யார்? அவளுக்கு எதிராக குற்றங்கள் செய்பவர்களும் அதை தட்டி கேட்காமலும் தண்டிக்காமல் இருப்பவர்களும்! “அவள்” இல்லாத உலகம் ஒன்று உருவாகும் எனின் அதுவே உலகின் இறுதி நாட்களாகும்….!

அவள் இன்றி அணுவும் அசையாது!!!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s